செய்தியாளர்: மருதுபாண்டி
பாரத ஸ்டேட் வங்கி ஹைதராபாத் சந்துலால் பரதாரி கிளையில் கணினி ஆப்பரேட்டராக பணி செய்தவர் சலபதி ராவ். இவர் எலக்ட்ரானிக் நிறுவனங்களில் போலியான சம்பள பட்டியல் தயார் செய்து ரூபாய் 50 லட்சம் வரை மோசடி செய்ததாக கடந்த 2002-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி எஸ்பிஐ வங்கியை ஏமாற்றியதாக குற்றச்சாட்டின் பேரில், சலபதி ராவ் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டதில், சலபதி ராவ் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நபர்கள் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட சம்பளப்பட்டியல் மூலம் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனால், கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சலபதி ராவ் மீது இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், சலபதிராவின் மனைவி கடந்த ஜூலை 2004ஆம் ஆண்டு, “எனது கணவரை காணவில்லை” என காமதிபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்தார்.
சில காலம் கழித்து, நீதிமன்றத்தை நாடிய அவர் “எனது கணவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரை இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு சலபதி ராவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக சிபிஐ அறிவித்து தேடி வந்தது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க சிபிஐ முயற்சி செய்தபோது நீதிமன்றத்தில் தடையானை பெற்று அதனையும் சலபதி ராவின் மனைவி தடுத்திருந்தார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் தனது அடையாளங்களை மாற்றி, பெயரை மாற்றி இவர் வசித்து வருவது கண்டறியப்பட்டது. அதன்பேரில் தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல்களை சிபிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ”சலபதி ராவ், ஹைதராபாத்தில் இருந்து சேலம் பகுதியில் தப்பி ஓடியநிலையில், அங்கு அவரது பெயரை வினித் குமார் என மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். மேலும், சேலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனக்கான புதிய அடையாளங்களாக ஆதார் அட்டை உள்ளிட்டவைகளையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் சலபதி ராவ் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், நாங்கள் அவரை தேடி சேலம் சென்றபோது 2014 ஆம் ஆண்டு எந்த ஒரு தகவலும் இல்லாமல் சேலத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் போபால் பகுதிக்கு சென்ற சலபதி ராவ், அங்கு கடன் மீட்பு முகவராக பணி செய்து வந்துள்ளார். அங்கிருந்து அவர் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூருக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அங்கு ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து. அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது 2016 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் சலபதி ராவ் பயன்படுத்திய வீட்டின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளங்களை வைத்து தீவிரமாக அவரை தேட தொடங்கினோம். இதன்படி, அங்கு அவுரங்காபாத் பகுதியில் உள்ள வெருள் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் விதித்மானந்த தீர்த்தர் என்ற பெயருடன் தனது அடையாள ஆவணங்களை மாற்றி தங்கியிருந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து 2021 ஆம் ஆண்டு வெளியேறி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் ஆசிரமத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்து கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி வெளியேறி, நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் அவர் தங்கி இருப்பதை கண்டறிந்தோம். இதனைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திற்குள் வந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் பண மோசடி வழக்கில் குற்றவாளியை சிபிஐ கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.