தமிழ்நாடு

மனைவி இறந்ததை காவல்துறைக்கு தெரிவிக்காத கணவர் - வரதட்சணைக்காக கொலையா ?

மனைவி இறந்ததை காவல்துறைக்கு தெரிவிக்காத கணவர் - வரதட்சணைக்காக கொலையா ?

webteam

சென்னையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளில் பெண் இறந்துள்ள சம்பவம் குறித்து அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கம், அண்ணா நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் ஹரி தாஸ். இவரது மகள் பாரதி (24) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணன் (30) என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிக்கு உடல்நிலை சரியில்லை என்று ராமகிருஷ்ணன் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாரதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனைவியின் உடலை ராமகிருஷ்ணன் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

மகளின் இறப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதியின் பெற்றோர், தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொன்றுவிட்டதாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பாரதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாரதி இறப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் பாரதி இறந்திருப்பதால், கோட்டாட்சியர் விசாரணைக்கும் வழக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.