உயிரிழந்த ராஜா புதியதலைமுறை
தமிழ்நாடு

மதுரை| கந்து வட்டி கொடுமையின் உச்சம்.. கழிப்பறை கழுவச் சொல்லி கொடுமை.. தற்கொலை முயற்சியால் விபரீதம்!

யுவபுருஷ்

செய்தியாளர் - பிரசன்னா

மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கத்தப்பட்டி பகுதியில் இனிப்பகம் நடத்தி வந்தவர்கள்தான் ராஜா - மலைச்செல்வி தம்பதி. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நினைத்த தம்பதி, அப்பகுதியைச் சார்ந்த ஒரு சிலரிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், தொழில் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்த காரணத்தினால் வட்டித் தொகையை முறையாக செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கடன் கொடுத்தவர்கள், தம்பதியை மிரட்யதோடு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அடித்தும் துன்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தியும் தாண்டி ராஜாவின் மனைவி மலைச்செல்வியை வீட்டிற்கு வந்து கழிவறை கழுவச் சொல்வது, பாத்திரம் கழுவ வைப்பது, வீட்டை கூட்டுவது போன்ற வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தி உள்ளனர் கடன் கொடுத்தவர்கள்(அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டின்படி).

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக வீட்டு வேலையை செய்த மலைச்செல்வி, வாங்கிய கடனுக்குண்டான வட்டி தொகையை கட்டியுள்ளார். ஆனால், அதன்பிறகும் வீட்டு வேலைக்கு ஏன் வரவில்லை என வீட்டிற்கு வந்து தன் மகள் முன்பே தகாத வார்த்தைகள் திட்டி உள்ளனர்.

இதனால் மணமுடைத்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மலைச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தற்கொலை செய்ய நினைத்தபோது எழுதிய உருக்கமான கடிதமும் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், வினோத் மற்றும் சிவா ஆகிய இருவரை கந்துவட்டி கொடுமையின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலூர் கோட்ட துணை கண்காணிப்பாளர் வேல்முருகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, கந்து வட்டிக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் கட்டமாக இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மேலும் இது குறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.