பாதிக்கப்பட்ட பெண்கள்  PT WEB
தமிழ்நாடு

ஈரோடு : இளம்பெண்களிடம் ரூ.5 லட்சம் திருடிய தம்பதி... பாதிக்கப்பட்ட பெண்கள் வைத்த செக்!

ஈரோட்டில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம்பெண்களிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

விமல் ராஜ்

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் அரவிந்தன். இவருடைய மனைவி பூங்கொடி. கடந்த 2019ம் ஆண்டு பூங்கொடிக்கு தனது உறவினர் மூலம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விவேக்-சௌமியா என்ற தம்பதியினர் அறிமுகமாகியுள்ளனர். இருவரும் தனியார் வங்கியில் வேலை செய்து வருவதாகக் கூறி ‘உங்களுக்கும் அங்கேயே வேலை வாங்கி தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய பூங்கொடி, தனது உறவினரான பிரியாவுடன் இணைந்து, மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாயை விவேக்-சௌமியா தம்பதியிடம் கொடுத்துள்ளனர்.

பணம் கொடுத்தவர்கள்

இதனையடுத்து ஒரு மாதத்தைக் கடந்தும், வேலை வாங்கி தராமல் தம்பதி இருந்து வந்துள்ளனர். பின்னர் விவேக்-சௌமியா தம்பதியினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வந்ததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

ரூ. 5 லட்சம் பணத்துடன் தலைமறைவான தம்பதி

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவரும் சத்தியமங்கலத்தில் இருப்பதை சமீபத்தில் அறிந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தங்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்குப் பணம் தராமல் அந்தத் தம்பதி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தலைமறைவாக உள்ள தம்பதி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் புகார் மனு அளித்துள்ளனர்.