தமிழ்நாடு

பசியால் வாடிய பழங்குடியினர் - புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் உதவி கரம் நீட்டிய நீதிபதி

PT

புதியதலைமுறையின் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் கீழ்மலையில் பசியால் வாடும் பழங்குடியின மக்களுக்கு நீதிபதி ஒருவர் உதவ முன்வந்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கால் கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்ட போதிலும், இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் கைகோர்த்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் உள்ள எழுத்திரைக்காடு, கொரவனாச்சி ஓடை, கரடிப்பாறை உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு ஊரடங்கு அமலானதில் இருந்து, குடிமைப்பொருள் தவிர்த்து எந்த உணவு பொருளும் கிடைக்காமலும் கூலி வேலைக்கும் செல்லமுடியாமலும் அவதிப்படுவதாக புதியதலைமுறையில் செய்தி வெளியானது.

இதனை அறிந்த மாவட்ட குற்றவியல் நடுவன் நீதிமன்ற நீதிபதி திணேஷ்குமார், அக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு மளிகைப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.