அரசுப்பள்ளி சுவரில் மனிதக் கழிவுகளை பூசி அட்டூழியம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாமக்கல் | பள்ளி சமையலறை கதவுகளில் மனிதக் கழிவுகளை பூசி அட்டூழியம்!

நாமக்கல் அருகே அரசு பள்ளி சுவர் மற்றும் சமையல் கூடங்களில் மனிதக் கழிவுகளை பூசி அட்டூழியம் செய்ந்துள்ளனர். எருமைப்பட்டி காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் மாவட்டம் எருமைபட்டி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 124 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (திங்கள்கிழமை) பள்ளிக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வழக்கம்போல சென்றுள்ளனர். அப்போது பள்ளியின் சமையல் அறை, பள்ளிச் சுவர், சமையல் கூடத்தின் பூட்டு உள்ளிட்ட இடங்களில் மனிதக் கழிவுகளை யாரோ பூசி இருந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

அரசுப்பள்ளி சுவரில் மனிதக் கழிவுகளை பூசி அட்டூழியம்

இதனையடுத்து, தலைமையாசிரியர் தனலட்சுமி கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சம்பவம் குறித்து எருமைப்பட்டி காவல் துறையில் புகார் அளித்தார். பின்னர், அதனை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். புகாரின் பேரில் எருமைப்பட்டி காவல் துறையினர் அரசுப் பள்ளி வளாகத்தில் மனிதக் கழிவுகளை பூசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனது சமூக வலைதலப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.

ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன்,

அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்றுள்ளார்.