தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

JustinDurai

கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடு, கருப்பு சிவப்பு நிற மண் குவளை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. 5 மற்றும் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7ம் கட்ட அகழாய்வில் இதுவரை மண் பானை, வட்டில் மூடிகள் , பருகு நீர் குவளை, அகண்ட வாய் கின்னம், பகடைகாய், உழவுவிற்க்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்பு கூடுகள், கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதுமக்கள் தாழியில் இருந்து அதன் உள்ளே உள்ள எலும்புக்கூடுகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் குமரேசன் ஆகியோர் தலைமையிலான குழு வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 4 அடி நீளம் கொண்ட எலும்புக் கூடு எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்புக் கூடுகள் என்பது குறித்தும், ஆணா ? பெண்ணா ? என்பது குறித்தும் இன மரபியல் குறித்தும், அவர்களின் உணவு முறை, ஆயுட்காலம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் முழுமையான மரபணுவில் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.