திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை இயக்குனருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலை பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் பலியானார்கள். கடந்த 17ம் தேதி நடந்த இந்த விபத்து தொடர்பாக, பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக பள்ளிக் கல்விதுறை இயக்குனர், நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர்