accused pt desk
தமிழ்நாடு

உரிய ஆவணங்களின்றி ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.1.58 கோடி; ஹவாலா பணமா? - சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

webteam

ரயில் மூலமாக கடத்தி வரப்படும் கஞ்சா, ஹவாலா பணம், மதுபானம் ஆகியவற்றை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை இணைந்து ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டனர்.

accused

உடனே அவர்களை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் நான்கு பைகளில் ஒரு கோடியே 58 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பணத்திற்கு உண்டான ஆவணங்களை அவர்களிடம் கேட்டபோது, முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணத்தை கொண்டு வந்த நபர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முகமது முதாசீர் குரேஷி (36), ஓலா குண்டா நியாஸ் அகமது (45), பைக் இம்ரான் (22), அப்துல் ரஹீம் (32) என தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆந்திர மாநிலத்தில் சொந்தமாக துணிக்கடை வைத்திருப்பதாகவும், துணி வாங்குவதற்காக பணத்துடன் சென்னை வந்ததாகவும், மற்றொருவர் தங்கம் வாங்க வந்ததாகவும் மாறி மாறி வாக்குமூலம் அளித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே காவல்துறையினர், வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

RPF station

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பிடிபட்ட நான்கு பேரையும் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தனர், ஹவாலா பணத்தை கைமாற்றும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.