தமிழ்நாடு

துரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..!

துரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..!

webteam

தேனி அருகே காவல்துறையினரின் மோப்ப நாயான ‘வெற்றி’ கஞ்சா விற்பவரை கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கஞ்சா விற்பனையாளர் சுரேந்தர் என்கிற கிறுக்கு அமாவாசை கைது செய்யப்பட்டார். இவரை காவல்துறை கண்டுபிடித்து, கைது செய்ய உறுதுணையாக இருந்தது காவல்துறையின் மோப்ப நாய் ‘வெற்றி’. சுரேந்தரை பிடிக்க மோப்ப நாய் வெற்றி எவ்வாறு உதவியது? என்பதை பார்க்கலாம்.

தேனி மாவட்ட எஸ்.பியாக அண்மையில் சாய் சரண் தேஜஸ்வி பொறுப்பு ஏற்றார். இவர் எஸ்.பியாக பதவியேற்ற உடன் மாவட்டத்திலிருக்கும் கஞ்சா விற்பனையாளர்களை பிடிக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி காவல்துறையினர் தங்களிடம் இருந்த ‘வெற்றி’உள்ளிட்ட ஐந்து மோப்ப நாய்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டுபிடிக்கும் பயிற்சி வழங்கினர்.

(கோப்பு படம்)

கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கம்பம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்  ‘வெற்றி’ உடன் காவல்துறையினர் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றவுடன் மோப்ப நாய் வெற்றி துரிதமாக செயல்பட்டு விவேகானந்தர் தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சுரேந்தரை கண்டுபிடித்தது. அப்போது சுரேந்தர் கையில் 250 கிராம் கஞ்சா பொருட்களை தனது கையில் வைத்திருந்தார். சுரேந்தரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சா பொருட்களை கைப்பற்றினர். அத்துடன் சுரேந்தர் மீது போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

போதை பொருள் வைத்திருந்தவரை பிடிக்க காவல்துறையினருக்கு மோப்ப நாய் உதவியாக இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் போதை பொருள் வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்க அதிகளவில் நாயை பயன்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.