தமிழ்நாடு

காவலரின் வழிகாட்டுதலில் அரங்கேறி வந்த திருட்டுச் சம்பவங்கள்.. சிக்கியது எப்படி?

காவலரின் வழிகாட்டுதலில் அரங்கேறி வந்த திருட்டுச் சம்பவங்கள்.. சிக்கியது எப்படி?

webteam

ஈரோடு அருகே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட மூவரை கைது செய்த  காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

அதிகரித்த குற்றச் செயல்கள்.. தேடுதல் பணியில் தனிப்படை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பெருந்துறை ஆய்வாளர் மசுதா பேகம் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பெருந்துறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக செந்தில்குமார் என்ற கார்த்திக் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பல்வேறு குற்றச் செயல்களில் இவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலரின் செல்போனில் செந்தில்குமாரின் எண்.. திடீர் ட்விஸ்ட்!

பெருந்துறையில் காவலர் ராஜீவ்காந்தி என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக ஆய்வாளர் மசுதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியின் செல்போனை போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இதில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு சிறை சென்ற செந்தில்குமாரை விசாரணை செய்த காவலர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி, செந்தில்குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று தெரிவித்ததோடு, சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சந்திக்குமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில் காவலர் ராஜீவ்காந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

காவலரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள்..

இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார், காவலர் ராஜீவ்காந்தியை சந்தித்துள்ளார். இதையடுத்து ராஜீவ்காந்தி தனது மளிகை கடையில் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், கருப்புசாமி மற்றும் சிலரை தங்கவைத்து பெருந்துறை, பெருமாநல்லூர் மற்றும் சித்தோடு பகுதியில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு சிசிடிவி கேமரா இல்லாத பகுதிகள், காவலர்கள் ரோந்து இல்லாத இடங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு காண்பித்து அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

சிறையில் காவலர் ராஜீவ்காந்தி!

இதைத் தொடர்ந்து காவலர் ராஜீவ்காந்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரையும் கைது செய்த பெருந்துறை போலீசார், கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறரை பவுன் தங்க நகைகள்,கொள்ளைக்கு பயன்படுத்திய கார், 2 பட்டாக்கத்தி அருவாள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.