தமிழ்நாடு

சிறுமி ரம்யாவின் கருவைக் கலைக்க முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு?

சிறுமி ரம்யாவின் கருவைக் கலைக்க முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு?

webteam

தமிழகத்திலுள்ள பலரின் மனதை உலுக்கும் வகையில் டிசம்பர் 18ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு தீர்ப்பை வழங்கியது. அது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமியின் கருவை கலைக்க மறுத்த தீர்ப்பாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 7ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி, கடந்த மே மாதம் தனது பக்கத்து வீட்டில் உள்ள 70 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பயத்தின் காரணமாக அந்தச் சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருக்க, கடந்த அக்டோபர் மாதம்தான் சிறுமியின் தாய் தனது மகள் கருவுற்றிருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

ஆனால், அப்போது சிறுமியின் வயிற்றில் இருந்த கரு, இருபது வாரங்களை தாண்டிவிட்டது. கூலிவேலை செய்யும் சிறுமியின் தாய் செய்வதறியாது தனது மகளை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கருவோ, கிட்டத்தட்ட 24 வாரங்களை தாண்டியதால் சிறுமிக்கு கருக்கலைப்பு மேற்கொள்வது மிகவும் ஆபத்து என்றும் இதற்கு நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க இயலும் என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.  

வேறுவழியின்றி சிறுமியின் தாய் நீதிமன்றத்தை நாட, அதை விசாரித்த நீதிமன்றமோ விசாரணையை இழுக்க, உரிய காலம் தாழ்த்தப்பட்டதால், சிசுவை கலைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், சிறுமியின் எல்லா செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டது. இதுகுறித்து சிறுமி ரம்யா தரப்பு வழக்கறிஞர் சசி கூறுகையில், “சிறுமி கருவுற்றிருப்பது தெரியவந்த சமயத்திலேயே நீதிமன்றத்தை உடனடியாக இருவரும் அணுகியிருந்தால், கருக்கலைப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இச்சம்பவம் நீதிமன்றத்தை சென்றடைவதற்குள் ரம்யாவின் சிசு, கிட்டத்தட்ட 24 வாரங்களை அடைந்துவிட்டது. அப்படி இருக்கையில் உயர்நீதிமன்றத்தால் மட்டுமே கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்க இயலும். அந்தப் படிக்காத அப்பாவி பெற்றோர் செய்வதறியாது நிர்கதியாய் நிற்கும் வேளையில் அவர்களுக்கு நீதிமன்றத்தை அணுகும் வழிமுறைகளை கூறவேண்டிய காவல்துறையும் அவர்களை அவமானப்படுத்தியது” என்று கூறினார். 

மேலும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், “20 வாரங்களை கடந்த கருவை கலைப்பது மிகவும் பாதுகாப்பற்ற செயல் என்றும், இருப்பினும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 வாரங்கள் தாண்டிய கருவையும் கருக்கலைப்பு செய்யலாம் என மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன” என்று தெரிவித்தனர்.

12 வயது சிறுமி ரம்யாவின் கருவைக் கலைப்பதில் சிக்கல் என மருத்துவர்கள் கூறிவிட, பிரச்னை வெளிவந்த உடனேயே இதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும், இது யாருடைய அலட்சியம்? விசாரணையை முடிக்க காலம் தாழ்த்திய நீதித்துறையின் அலட்சியமா? இல்லை ‘காவல்துறை உங்கள் நண்பன்’என்ற கூற்றின்படி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர தவறி, அவர்களையே அவமானப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் போன காவல்துறையின் அலட்சியமா? எனப் பல்வேறு
கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

அலட்சியத்திற்கு யார் காரணம்? 

விதிகளின்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து உடனடியாக மதுரை போலீசாருக்கும், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மருத்துவ அறிக்கையோடு நவம்பர் 3ம் தேதிதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என வழக்கறிஞர் கூறியுள்ளார். 

மேலும், சிறுமியையும் அவரது தாயாரையும் தகாத மற்றும் மனதளவில் பாதிக்கக்கூடிய வார்த்தைகளால் தாக்கிய போலீசார், புகாரை ஏற்று விசாரணையை தொடங்காமல் 4 நாட்களாக கிடப்பில்போட்டு பின் தொடங்கியது ஏன்? 12 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை சிறிதும் பொருட்படுத்தாது, அவர் கருவுற்றதற்கு சிறுமி குடும்பத்தினரையே காவல்துறை குற்றஞ்சாட்டியது ஏன்?

இதனால், பெரிதும் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர், எங்கே சமூகம் தங்களை தவறாக சித்தரித்துவிடுமோ எனப் பயந்து வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். முறையாக விசாரணை செய்ய தவறிய போலீசாரின் நடத்தையால் இந்தப் பிரச்னை மேலும் வலுப்பெற்றது என வழக்கறிஞர் சசி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உடனடியாக சட்டரீதியிலான உதவிகளை வழங்காமல், அவர்களாகவே ஏதேனும் ஒரு வழக்கறிஞரை அணுகும்படி கட்டாயப்படுத்தியதாக சிறுமியின் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, கமிட்டியின் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் மேற்கொண்டதன் காரணமாக அவர்களும் உடனடியாக இதில் தலையிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரே, சிறுமியை பாலியல்
வன்கொடுமை செய்த 70 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து குழந்தைகள் நல கவுன்சில் கிரிஜாகுமார் பாபு கூறுகையில், “மருத்துவ அறிக்கை தயாரிக்கப்பட்ட அதே நாளிலேயே இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். சுகாதாரத்துறையும் சட்டத்துறையும் ஒன்றிணைந்து இவ்வழக்கை உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

தனி நீதிபதி அமர்வில் இருந்து இந்த வழக்கு, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின் மறுபரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிறகு மறுபரிசோதனை முடிக்கப்பட்டு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய 5 நாட்கள் ஆனது. ஆனால் துரதிஷ்டவசமாக, இவை எல்லாம் முடிவதற்குள் ரம்யாவின் சிசு 30 வாரங்களை எட்டிவிட்டது. இதன் விளைவால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டார். 

இறுதியில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது சாத்தியமில்லை என மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கூற, நீதிமன்றமும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது சாத்தியமற்றது என டிசம்பர்18ம் தேதி தீர்ப்பளித்தது. 

இந்தக் குளறுபடிக்கு யார் பொறுப்பு? சட்டம் பாதிக்கப்படவருக்கு கடுமையாக இருந்ததைபோல அந்தக் குற்றத்தை இந்தப் பிஞ்சு பிள்ளை மீது ஏவியவர் மீது கடுமைக்காட்டவில்லை? இவையெல்லாம் பல சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்விகள். மொத்தத்தில் “சிறுமி இந்தப் பிரசவ வலியைத் தாங்கி கொள்வாரா? கடைசியில் இந்த இரு உயிர்களையும் ஆபத்தில் விட்டுவிட்டனர்” என்று வழக்கறிஞர் சசி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Credits- The News Minute