இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும் விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிமாக ஏற்படுகின்றன. மழைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே இருக்கும்போது மின்னல் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். அருகில் கட்டடங்கள் எதுவும் இல்லாவிட்டால் பள்ளமான இடம், அகழி, குகை போன்ற இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடவேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும்போது மரத்திற்கு அடியில் நிற்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உயரமான மரங்களை மின்னல் எளிதாக தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்சாரம் கடத்தும் பொருட்களிடமிருந்தும் தள்ளி இருக்க வேண்டும். நெருப்பு இருக்கும் இடங்கள், ரேடியேட்டர்கள், அடுப்பு, உலோக பொருட்கள், மற்றும் தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். நீரினுள் இருந்தால் அந்நீர்நிலையினை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
படகு மற்றும் ஓடம் போன்றவற்றில் நீர் நிலைகளில் பயணித்து கொண்டிருந்தால் உடனே கரை திரும்ப வேண்டும். சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ அல்லது உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும்போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாக கருதி அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும். கால்நடைகளை இடிதாக்கி பொருத்திய பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்வதன் மூலம் மின்னல் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும்.
செய்யக் கூடாதவை
மின்சாரத்தால் இயங்கக் கூடியவையான ஹேர் டிரையர், மின்சார பல்துலக்கிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும். மின்னல் ஏற்படும் போது கைபேசி, தொலைபேசியினை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்குதலின் போது மக்கள் ஒதுங்குவதற்கு கான்கிரீட் கூரைகள் மற்றும் தரை தளத்துடன் கூடிய மூடிய வீடுகள் ,பள்ளிகள்,அ லுவலகம் அல்லது வணிக வளாகங்களை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் போது கைகளால் கால்களை இறுக்க அணைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் குனிந்த நிலையில் தரையில் அமர்ந்து கொள்வதன் மூலம் மின்னல் தாக்குதலிருந்து தப்பிக்கலாம். உயர் அழுத்த மின் தடங்கள்,இரும்பு பாலங்கள்,செல்போன் கோபுரங்ளுக்கு அடியில் நிற்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.