ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி 1 கி.மீ தூர சுற்றளவிலும், 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது ஏப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளிதலையைச் சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்களை கட்டக் கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டடங்களை கட்டியுள்ளனர். (30.01.1997) ஆம் ஆண்டு அரசாணை படி கோவிலைச் சுற்றி 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும் 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோவிலில் இருந்து 100 மீட்டருகுள் கட்டப்பட்டுள்ளது. கோவில் அருகே அமைந்துள்ள சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது, விதிகளை மீறி பல கட்டடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அகற்றக் கோரி வழக்கறிஞர் ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்.' என மனுவில் கூறிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது ஏப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.