சென்னையை சேர்ந்த 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரும் காட்டுத் தீயில் சிக்கியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னையில் இருக்கும் பிரபல மலையேற்ற கிளப் மூலம் 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் என மொத்தம் 36 பேர் குரங்கணி மலைப் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்றுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை இரண்டு குழுக்களாக பிரிந்து மலையேற தொடங்கிய குழுவினர், அன்றிரவு கொழுக்கு மலைப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துள்ளனர்.
இயற்கை காட்சிகளை ரசித்தபடி புத்துணர்ச்சியுடன் மலையேறிய குழுவினருக்கு விடிந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே கடந்த இரு தினங்களாக தேனி மலைப் பகுதியில் எரிந்து வந்த காட்டுத் தீ மெல்ல பரவி, அவர்கள் இருக்கும் இடம் வரை துரத்தி வந்துள்ளது. பதறிப்போன குழுவினர் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடி அடர்ந்த காட்டுக்குள் வழி தவறி சென்றுள்ளனர்.
வனம் முழுவதும் தீ பரவியதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் பாறை இடுக்குகளில் தஞ்சம் புகுந்தனர். தப்பிக்க வழித் தெரியாமல் காட்டுத் தீயில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மயங்கி விழுந்தனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக உள்ளூர் மக்களும், வனத்துறையினரும் அங்கு விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மலையில் இருந்து இறக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, தீக்காயம் அடைந்தவர்களை மீட்க சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து வந்த கமாண்டோக்கள் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரித கதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசுத் தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.