முதலீடுகள்  முகநூல்
தமிழ்நாடு

3 ஆண்டுகால திமுக ஆட்சியில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் மட்டுமின்றி, 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களும் அதன் ஒரு பகுதியாக மாறி இருக்கிறது.

அதன்படி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு, உலகின் முன்னணி நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அலுவலர்களையும் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

இத்தகைய, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தொழில்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு துபாய் பயணம் மேற்கொண்டபோது, 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதலீடுகள் எவ்வளவு?

2023ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதே போன்று, கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழக அரசு கூறியது.

அதையடுத்து, ஸ்பெயின் பயணத்தின்போது, 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய், தற்போதைய அமெரிக்க பயணத்தின்போது 7 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 55 சதவீதம் வரை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள், அதில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், கிடைத்த வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4வது முறையாக வெளிநாடு சென்று திரும்பும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாதித்தது என்ன என்றும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.