செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பணம் பெற்றுக்கொண்டு முறைக்கேடாக அரசுப் பணிகளை ஒதுக்கினார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கில்தான் செந்தில்பாலாஜி தற்போது பிணை பெற்றுள்ளார். ஆனால், இந்த வழக்கு சம்பந்தமாக இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.
இன்று அந்த வழக்கின் விசாரணை அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தான வழக்கு விசாரணையை நடத்துவதற்காக, சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், “தற்போது மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது நடந்துவரக்கூடிய மாற்றங்கள் என்பது தங்களுக்கு அச்சங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை என்ன ஆகுமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில்பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கின் விசாரணையை விரைவாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட வேண்டும் என தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது போன்ற விபரங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் 4 குற்றப்பத்திரிக்கைகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து அக்டோபர் மாதம் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.