தவெக முதல் மாநாடு புதிய தலைமுறை
தமிழ்நாடு

#EXCLUSIVE: பரபரக்கும் விக்கிரவாண்டி.. எப்படி உள்ளது தவெக மாநாடு நடைபெற உள்ள இடம்? சாதிப்பாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில் மாநாடு வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாடு நடக்கும் இடத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்....

Kaleel Rahman, PT WEB

செய்தியாளர்: காமராஜ்

எம்ஜிஆர் பாணியில் கட்சி துவங்கியுள்ள விஜய்:

‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என எம்ஜிஆர் பாணியில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், பரபரப்பாக சுற்றிச் சுழன்று ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்.

என். ஆனந்த், விஜய்

ஆரம்பம் முதலே சர்ச்சை:

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பமே சர்ச்சையில் தொடங்கியது என்றே சொல்லலாம். உதாரணத்துக்கு

* தமிழக வெற்றி கழகம் என முதலில் பெயர் வைக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டது.

* அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆங்கிலத்தில் TVK என அழைக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் TVK என அழைக்கப்படுவதால் அடுத்த சர்ச்சையில் சிக்கியது.

* அடுத்ததாக தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால், ‘தவெக கொடியில் உள்ள யானைகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது. இருப்பினும் தேர்தல் ஆணையம், இதில் தாங்கள் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது.

எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்த தமிழக மக்கள்:

அரசியல் அனுபவம் மிக்க திரை நட்சத்திரமாக ஜொலித்த எம்ஜிஆர், திமுகவில் இருந்த விலகி அதிமுக என்ற புதிய கட்சியை 1972-ல் தொடங்கினார். மக்கள் தொண்டனாக ஏழைகளுக்காகவே வாழ்ந்த ஏழைப்பங்காளன் எனக்கூறி, எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்தனர் தமிழக மக்கள்.

MGR

ஆனால் அதேபாணியில், எம்.ஜி.ஆர் போல நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் அரசியலில் அப்படி குதித்த எந்த நடிகரும், கரை சேரவில்லை. இதில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விதிவிலக்கு என்றபோதிலும், எம்.ஜி.ஆர்.-ன் இடம் (முதல்வராக) அவர்களுக்கு மக்கள் மத்தியில் இப்போதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் தற்போது தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக உள்ள விஜய், கட்சித்தொடங்கி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சித்தொடங்கிய விஜய், இப்போதுவரை கொடி அறிமுகம் மட்டுமே செய்துள்ளார் என்பதுதான், முக்கியமான நெருடல். தங்கள் கட்சியின் கொள்கை என்ன என்றுகூட அவர் இன்னும் சொல்லவில்லை.

தவெக தலைவர் விஜய்

மாநாட்டு அனுமதி வழங்க 32 கேள்விகளை முன்வைத்த காவல்துறை:

இது பெரும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடியில் இடம்பெற்றுள்ள சின்னங்களின் விளக்கமும், கட்சியின் கொள்கையும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்போடு தவெக முதல் மாநில மாநாடு விக்ரவாண்டி வி.சாலையில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் 32 கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு கட்சியின் சார்பில் பதில் அளித்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாநாட்டு பணிகள்:

இதையடுத்து மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற முனைப்பொடு மாவட்டம் தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம், மற்றும் அரசியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

அதேநேரம், மாநாடு நடைபெற உள்ள இடத்தில் தொடர்ந்து பருவமழை பெய்து வரும் நிலையில், பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் மாநாட்டு பணிகள் குறித்து இங்கே... விரிவாக பார்க்கலாம்...

மாநாட்டு பந்தலில் 160 அடி நீளம் 60 அடி உயரத்தில் மேடை அமைக்கப்படுக்கிறது. 12 அடி உயத்தில் மேடை அமைக்கப்படுவதால் மேடைக்கு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்காக தயாராகும் மேடை

மாநாட்டு பந்தலில் 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன:

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் விஜய், மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்ற உள்ள நிலையில், மாநாட்டு மேடைக்குச் சென்று அங்கிருந்து ரேம்ப் வாக் போன்று அமைக்கபட்டுள்ள மேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைக்க உள்ளார்.

தவெக மாநாட்டில் கொடி ஏற்றப்பட உள்ள இடம் தயாராகும் காட்சி

மாநாட்டு பந்தலில் 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மினி சட்டப்பேரவை போல மாநாட்டு மேடை அமைக்கப்படுவதாக தெரிகிறது.

கர்ப்பிணிகள், முதியவர்கள் அமர்வதற்கு தடுப்புகள் போடப்பட்டு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மாநாட்டு பந்தல் அருகே தண்டவாளம் உள்ளதால் அங்கு யாரும் செல்லாதவாறு தகரங்கள் கொண்டு மூடப்படுகின்றன.

தவெக மாநாட்டிற்காக இருக்கைகள் அமைக்கப்படும் காட்சி

வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கபட்டுள்ளது:

மாநாட்டு பந்தல் அருகில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 40 ஏக்கர் நிலமும், மாநாடு எதிர்புறம் 120 ஏக்கரும் கிழக்கொந்தையில் 40 ஏக்கர் என 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கபட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் வாகனம் மட்டும் மாநாட்டு திடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்காக தயாராகும் மேடை

சென்னை, திருச்சி: வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட திட்டம்:

மாநாடு நிறைவு பெற்று வாகனங்கள் வெளியே செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் செஞ்சி வழியாகவும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய வாகனங்கள் கூட்டேரிப்பட்டிலிருந்து திருவக்கரை பனயபுரம் வழியாக விழுப்புரத்திற்கும் திருப்பிவிடப்படவும் உள்ளன.

மாநாட்டு பாதுகாப்பு பணியில் துபாய் நிறுவனம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு சிறப்பாக நடைபெறவும், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது.

தவெக மாநாட்டில் மக்கள் அமர தயாராகும் இடம்

மாநாடு திடல் தயாராகும் பணிகள் குறித்து மேலதிக தகவல்களை, கீழ் இணைக்கப்படும் காணொளி வாயிலாக காணலாம்!

தமிழக மக்கள் மத்தியில் பேசிப் பேசியே கட்சி வளர்த்து ஆட்சியைப் பிடித்த திமுக, அதிமுக ஆகிய திராவிட கழகங்களுக்கு மத்தியில் அதிகம் பேசாத விஜய் அரசியல் களத்தில் ஜொலிப்பாரா என்பது 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே தெரியவரும். அதற்கான சாம்பிளாக, வரப்போகும் மாநாடு இருக்கப்போகிறது. இன்னும் ஒரு வாரம்தான்... த.வெ.க-வின் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்!