தமிழ்நாடு

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் !

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் !

webteam

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் தான் இறப்பதற்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளருக்கு, “அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. 

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நந்தீஷ் - சுவாதி. இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒசூர் ராம்நகரில் தனியாக வாடகை எடுத்து இரண்டு பேரும் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரும் காணாமல் போயுள்ளனர்.

தகவல் அறிந்த நந்தீஷின் தம்பி சங்கர் தனது அண்ணனையும் அவரது மனைவியும் கண்பிடித்து கொடுக்குமாறு ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலகவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி ஆற்றில் நந்தீஷ் சுவாதி இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பெண்ணின் உறவினர்கள் கடத்தி சென்று ஆவணக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் சூடகொண்டப்பள்ளி கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அடிதடி கலவரம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ் தான் இறப்பதற்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளருக்கு, “அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டுள்ளேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சக பணியாளர் சஞ்சய் பட்டேல் கூறுகயில், ”நான் நவம்பர் 9 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வழக்கம்போல் கடையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றேன். இரவு தூங்கி விட்டு காலை செல்போனை எடுத்து பார்த்தேன். அப்போது அதிகாலை 2 மணியளவில் நந்தீஷிடம் இருந்து எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அதில், அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டேன் என கூறியிருந்தான்.” என தெரிவித்துள்ளார்.