Cow PT Desk
தமிழ்நாடு

தன் பாலை தானே குடிக்கும் பசுவால் வருமானம் இழந்த விவசாயி: திருவண்ணாமலை அருகே ஆச்சர்யம்; நடந்தது என்ன?

பாலை அனைத்தும் பசு மாடு குடிப்பதால் விவசாயியால் பாலை கறக்க முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக ரூபாய் 30 ஆயிரம் வரை பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

PT WEB

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான சுகுமார் என்பவர் பசுமாடு ஒன்று வளர்த்து வருகிறார். இந்த பசு மாடு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கன்று ஒன்று ஈன்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை பசு மாட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 9 லிட்டர் வரை விவசாயி சுகுமார் பால் கரந்துள்ளார். அதன் பின்னர் அரை லிட்டர் பால் கூட கறக்க முடியவில்லை எனத் தெரிவிக்கும் சுகுமார் கன்று குட்டி பாலை குடித்திருக்கலாம் என எண்ணி உள்ளார்.

பின்னர் ஒரு நாள் அந்த பசு மாடு தனது காம்பிலிருந்து தன்னுடைய பாலை தானே குடித்ததை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார். கன்று குட்டி சென்று பால் குடிக்க முயற்சி செய்தாலும் பசு மாடு தனது கன்று குட்டியை கூட பால் குடிக்க விடவில்லை. பாலை அனைத்தும் பசுமாடு குடிப்பதால் விவசாயியால் பாலை கறக்க முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக ரூபாய் 30 ஆயிரம் வரை பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசனை அணுகி கேட்டபோது, இது பாஸ்பரஸ் சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடியது எனவும் இதன் காரணமாக மாட்டின் காம்புகளில் காயம் மற்றும் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதனை தற்காலிகமாக தடுக்கும் பொருட்டு மாட்டின் மூக்கில் மூக்கு வளையம், எலிசபெத் காலர் என்ற கழுத்து வளையம், கட்டையலான கழுத்து வளையம், மாட்டு காம்புகளில் கசப்பு தன்மை உள்ள வேப்பெண்ணெய் போன்றவற்றை தடவலாம் எனவும் தெரிவித்தார்.

நிரந்தரமாக இதனை தடுக்க மருத்துவரின் ஆலோசனைப்படி, தாது உப்பு கலவை, பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை முறையாக வழங்குவதன் மூலம் பசுமாடு தனது பாலை குடிப்பதை தடுக்க முடியும் என கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.