தமிழ்நாடு

மூடப்படுகிறது ஏர்செல்: வேறு சேவைக்கு இதனை செய்யுங்கள்..!

Rasus

ஏர்செல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், மொபைல் போர்ட்டபிளிட்டி எனப்படும் முறையில் வேறு சேவைக்கு மாறுவது எவ்வாறு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல் ‌நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. கடனை திரும்ப செலுத்த முடியாததால் திவாலானதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவுடன் ஏர்செல் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‌ அதற்குள் ஏர்செல் வாடிக்கையாளர்கள் எண்ணை மாற்றாமல், வேறு நெட்வொர்க்கிற்கு மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மொபைல் போர்ட்டபிளிட்டி எனப்படும் முறையில் வேறு சேவைக்கு மாறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் மெசேஜ் பகுதிக்குச் சென்று PORT என ஆங்கிலத்தில் எழுதி, ஒரு எழுத்துக்கான இடைவெளிவிட்டு தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பின்னர் 1900 என்ற எண்ணுக்கு அந்த தகவலை அனுப்ப வேண்டும்.

அதன்பிறகு, மொபைல் எண்ணை மாற்றி அமைப்பதை உறுதி செய்வதற்கென, UPC எனப்படும் ஒரு குறியீட்டு எண் ஏர்செல் மொபைல் எண்ணுக்கு வரும். அதனைத்தொடர்ந்து, ஏர்செல் வாடிக்கையாளர்கள், எந்த சேவை நிறுவனத்திற்கு மாறி விரும்புகிறீர்களோ அதன் சேவை மையத்திற்கு ஆதார் மற்றும் முகவரிச்சான்று தொடர்பான ஆவணங்களுடன் அணுக வேண்டும்.

அந்த சேவை நிறுவனத்திடம், ஏர்செல் மொபைலுக்கு வந்த UPC எண்ணைக் காண்பித்து, உரிய ஆவணங்களைக் கொடுத்தால், அவர்களிடமிருந்து புதிய சிம் கார்டு கிடைக்கும்.

அதன்பிறகு, சில மணி நேரத்தில் ஏர்செல் மொபைல் சேவை துண்டிக்கப்படும். பின்னர் புதிய சேவை நிறுவனம் வழங்கிய சிம் கார்டை பயன்படுத்தத் தொடங்கலாம். புதிய சிம் கார்டுக்கான சேவை தொடங்க ஒரு வாரம் வரை பிடிக்கும் என்று ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவை நிறுவனத்தை மாற்றினாலும் மொபைல் எண் மாறாது என்றும் ஏர்செல் விளக்கமளித்துள்ளது.