தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த வீடுகள்

கிருஷ்ணகிரி: சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த வீடுகள்

Sinekadhara

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சந்தம்பட்டி கிராமத்தில் வீடுகள், மா, தென்னை, முருங்கை மரங்கள் உடைந்து சேதமடைந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. நேற்று போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாதாரண மழையால் இல்லாமல் ஆலங்கட்டி மழையாக பெய்தது.

இந்நிலையில் சந்தம்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஓடு போர்த்திய வீடு சூறாவளி காற்றால் தூக்கி வீசப்பட்டது. அதேபோல் மாதப்பன் என்பவரது வீட்டின் ஓடும் தூக்கி வீசப்பட்டு, அவரது வீட்டில் இருந்த சுமார் 10,000 மதிப்புள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.

அதே கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரது ஓட்டு வீடும் சூறாவளி காற்றால் சேதமானது. அதேபோல் முல்லைவேல் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கரில் இருந்த மாமரங்களில் பல வேரோடு சாய்ந்து விழுந்தன. ராஜேந்திரன் என்பவரது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த முருங்கை மரங்கள் முற்றிலும் உடைந்து சேதமானது.

கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நேற்று பெய்த சூறாவளி காற்றால் சந்தம்பட்டி கிராமமே பெரிய அளவு சேதாரமானதால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதை சீர்செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் அங்குள்ள மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.