வாடகை தராததால் மாடிப்படியை இடித்த ஓனர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காஞ்சிபுரம் | 6 மாதங்களாக வாடகை கட்டாத குடும்பம்.. ஆத்திரத்தில் உரிமையாளர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

PT WEB

செய்தியாளர் - இஸ்மாயில்

காஞ்சிபுரம் விளக்கடிகோயில் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு, வானவில் நகர் பகுதியிலும் வீடு ஒன்று உள்ளது. அதன் மேல்மாடி, வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வேணுகோபால் தனது மனைவி, மகள், பேர குழந்தைகள் மற்றும் தனது தம்பியுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் வேணுகோபால் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் அவர்களால் முறையாக வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை வீட்டை காலி செய்யுமாறு, சீனிவாசன் கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் உதவியுடன் பேசி கால அவகாசம் பெற்ற வேணுகோபால் குடும்பத்தினர், ஆறு மாத காலமாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து அகற்றியுள்ளார்.

இதனால் வேணுகோபால் குடும்பத்தினர், தங்களது வீட்டிற்குள்ளேயே சிக்கி தவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும், வீட்டில் உள்ளவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வேணுகோபாலை, கயிறு கட்டி மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வாடகை பாக்கிக்காக தனது சொந்த வீட்டின் மாடிப்படிகளை உரிமையாளரே இடித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வேணுகோபாலின் குடும்பத்தினரையும் தவிக்க செய்திருக்கிறது.