தமிழ்நாடு

இன்று ஆஜராவாரா சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்?

இன்று ஆஜராவாரா சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்?

Rasus

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் சரணடைய உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ராஜகேபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டிருந்தது.

உணவுக்குப் பெயர் போன சரவணபவன் உணவகம், ஒருவரின் உயிர் எடுக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அடிபட்டது. காரணம் அதன் உரிமையாளர் ராஜகோபால். சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவர், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இனிமையாக சென்று கொண்டிருந்த காதல் தம்பதியின் வாழ்க்கையில் வில்லனாக வந்து சேர்ந்தார் ராஜகோபால். ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால். அதற்குத் தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கடத்தப்பட்டார்.

கணவரைக் காணவில்லை என்றும், ராஜகோபாலின் ‌ஆட்கள் அவரைக் கடத்திவிட்டதாகவும் சென்னை வேளச்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார் ஜீவஜோதி. விசாரணையை தொடங்கிய காவல்துறை கொடைக்கானல் மலைச் சாலையில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடலைக் கைப்பற்றியது. இதுதொடர்பாக ராஜகோபால், அவரது மேலாளர் டேனியல் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தம்மீதான புகாரை மறுத்தார் ராஜகோபால். தொழில் போட்டியால் தனது எதிரிகள் செய்த சதியே இந்தக் கொலை வழக்கு என்றார் அவர். ஆனால் கைது செய்யப்பட்ட மற்றொருவரான டேனியல் உண்மையைக் கூறிவிட்டார். பிரின்ஸ் சாந்தகுமாரை காரில் கடத்தி அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

10 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ஜூலை 7ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உச்சநீதிமன்றம் கெடுவிதித்தது. எனவே இன்று ராஜகோபால் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.