தமிழ்நாடு

சம்பள பாக்கியை தராததால் முதலாளியை வெட்டிய மேலாளர்

webteam

சென்னையில் சம்பள பாக்கி தராததால் உணவு விடுதியின் உரிமையாளரை சரமாரியாக வெட்டிய புகாரில் மேலாளர் மற்றும் பங்குதாரர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பழனிநாதன் மற்றும் எஸ்.செந்தில் ஆகியோர் இணைந்து உணவு விடுதி நடத்தி வருகின்றனர். அங்கு பணிபுரிந்து வந்த மேலாளர், ஊதியப் பிரச்னை காரணமாக பணியில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உணவு விடுதியின் முன்பு நின்று தனது நண்பர்களுடன் பழனிநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்குவந்த மேலாளராக இருந்தவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனிநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். 

தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் பழனிநாதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர். மேலும் விசாரணையில், பழனிநாதனின் பங்குதாரராக இருந்த செந்திலின் தூண்டுதல் காரணமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர். மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.