Police station pt desk
தமிழ்நாடு

ஓசூர் | தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு

ஓசூர் அருகே கோழிப் பண்ணையில் தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து இரண்டு வடமாநில குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கும்பலாபுரம் ஊராட்சி கோபசந்திரம் கிராமத்தில் ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான கோழி பண்ணை உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜகாவத் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி பணி புரிந்து வருகிறார். இவரது பெண் குழந்தைகளான சார்பானு (4)ஆயத்காத்தூன (3) ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் கோழிப் பண்ணை அருகே உள்ள தீவன அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தீவன மூட்டைகள்

அப்போது எதிர்பாராத வகையில் தீவன மூட்டைகள் இரண்டு பெண் குழந்தைகள் மீதும் விழுந்துள்ளது. இதில், மூச்சுத் திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது குழந்தைகளின் தந்தை சடலத்தை எடுக்க விடாமல் பிரச்னை செய்துள்ளார்.

அதன் பிறகு கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சடலங்களை. மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.