தமிழ்நாடு

ஓசூர்: 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

ஓசூர்: 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் தற்போது வரை ஓகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஆழ்துளை குழாய்களை நம்பிதான் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இதையடுத்து கோடைகாலம் துவங்கிய நிலையில் மூன்று ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் வற்றியுள்ளது. ஒரே ஒரு ஆழ்துளை குழாயில் மட்டும் தண்ணீர் வருவதால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்க, தண்ணீர் தொட்டி வைத்துள்ளவர்களிடம் சிலர் டிரக்டர்களில் தண்ணீர் விலைக்கு வாங்கி வருகிறார்கள். தண்ணீர் தொட்டி இல்லாதவர்கள், ஏழைகள் தண்ணீர் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தண்ணீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.