தமிழ்நாடு

சென்னை "ஹாஸ்டல்"களுக்கு புதிய நெறிமுறைகள்

webteam

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில், குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதனால் சென்னையில் உள்ள விடுதிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டிருந்தார். அதன்படி விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று, உரிமம் பெற வேண்டும். 

இந்நிலையில், சென்னையில் மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கெடு 21ஆம் தேதி முடிவடைகிறது. எனினும் நகரில் உள்ள 2 ஆயிரம் மகளிர் விடுதிகளில் இதுவரை 564 மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதிகளை பதிவு செய்வதற்கான கெடு முடிய 3 நாள்களே எஞ்சியுள்ள நிலையில் சென்னையில் உள்ள 25 சதவீத மகளிர் விடுதிகள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பதிவு பெறாத சுமார் ஆயிரத்து 500 மகளிர் விடுதிகள் மூடப்படும் எனக்கூறப்படுகிறது. 

இதன்காரணமாக அங்கு தங்கியிருக்கும் பெண்கள் வேறு விடுதிகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரித்து இருப்பதால் பதிவு பெற்ற மகளிர் விடுதிகள் கூடுதல் கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.