உயிரிழந்த பெண் கவிதா PT WEB
தமிழ்நாடு

ஓசூர்: நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தை; மறுநாள் தாய்ப்பால் கொடுக்க காத்திருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்

ஓசூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் குழந்தை பிறந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

ஜெகன்நாத் நிருபர் - ஓசூர்

ஓசூர் அருகே உள்ள ஆனேகல் பகுதியைச் சேர்ந்தவர் நாராயனப்பா - முனி லக்ஷ்மியம்மா தம்பதி. இவர்களுடைய மகள் கவிதா (24). இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜிகினி அருகே உள்ள கோணசந்திர பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில், கவிதா இரண்டாவது முறையாகக் கர்ப்பம் அடைந்துள்ளார். நிறமாத கர்ப்பிணியான கவிதாவை ஆனேகல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளனர். கவிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. மறுநாள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க கவிதா ஆசையாக இருந்துள்ளார்.

இதனையடுத்து கவிதாவுக்கு வயிறு பகுதி வீக்கமடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உறவினர்கள் மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி கவிதாவை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்கள், தாயின் உடல்நிலை மோசமாக உள்ளதால் பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் கவிதாவை ஆம்புலன்ஸ் மூலம் பொம்மசந்திர பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கவிதா

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை பிறந்து மறுநாளே பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.