தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது?.. மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது?.. மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

Sinekadhara

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், பூரண குணமடைந்து வருகிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த 12ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடற்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நேற்று சென்றிருந்தபோது அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே முதல்வர் விரைவில் குணமடைந்து வர, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள முதல்வர் பூரண குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.