தமிழ்நாடு

“முக சிகிச்சைக்குப் பின் சிறுமி தான்யா நலமாக உள்ளார்”- தனியார் மருத்துவமனை

“முக சிகிச்சைக்குப் பின் சிறுமி தான்யா நலமாக உள்ளார்”- தனியார் மருத்துவமனை

Sinekadhara

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தான்யா அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார் என தனியார் மருத்துவ நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆவடி அருகே வீராபுரத்தில் வசித்து வந்த ஸ்டீபன் - சௌபாக்யா தம்பதியின் மூத்த மகளான தானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து புதிய தலைமுறையில் செய்தி கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இலவசமாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று தாமாக முன்வந்து சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவி அங்கு அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

முன்னதாக சிறுமி மருத்துவமனையில் இருந்த ஆறு நாட்களும் தொடர்ந்து தினமும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறுமியை சந்தித்து சிறுமி உடல் நிலை, மருத்துவ விவரங்கள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து வந்தார். இன்று காலை மருத்துவ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் சிறுமி நலமாக உள்ளார். சிகிச்சைக்கு பிறகு நல்ல முன்னேற்றம் இருக்கின்றது. மெல்ல குணமடைந்து வருகிறார். அவர் சுயநினைவோடு பெற்றோரிடம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டு தற்போது இயற்கையாக சுவாசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அறுவை சிகிச்சைக்கு பின்னர் 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் பின்னர் பத்து நாட்கள் சாதாரண வார்டிலும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது..