ஆஜர்படுத்தப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர் pt web
தமிழ்நாடு

பட்டுக்கோட்டை இளம்பெண் ஆணவக்கொலை விவகாரம் - பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

PT WEB

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன், அதே கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த 31.12.2023 அன்று பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரிய வர, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பின் நவீன் உடன் இருந்த ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து, திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த நவீனுக்கு, ஐஸ்வர்யா சொந்த ஊரிலுள்ள அவரின் பெற்றோரின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி ஐஸ்வர்யா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். அவர் இறந்ததை யாருக்கும் தெரிவிக்காமல், குறிப்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை பெற்றோர் எரித்து விட்டனர். இந்த தகவல் தெரியவரவே நவீன் விரைவாக புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நவீன் தரப்பில், “இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. அவரது உறவினர்கள் கொலை செய்திருக்க கூடும்” என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஐஸ்வர்யாவின் பெற்றோர் உள்பட ஆறு நபர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆணவப்படுகொலையோ என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை சந்திப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தாயார் ரோஜா மற்றும் தந்தை பெருமாள் இருவரும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.