N.Sankaraiah pt desk
தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்-ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

webteam

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த கோப்பு ஆளுநரிடம் அனுப்பப்பட்ட நிலையில், அதில் கையெழுத்திட ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வருகிற 2ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது கையெழுத்திட வேண்டுமென்று அமைச்சர் பொன்முடி ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விஜய மஹாலில் நடைபெற்ற கருத்தரங்கில் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர்..என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் முன்வந்துள்ளது. இந்நிலையில், இதற்கான கோப்பில் ஆளுநர் ஆர்என்.ரவி கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. இதன் மூலம் ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என திட்டமிட்டு கோப்பில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எப்படி சுதந்திரப் போராட்டத்தை மறைத்தார்களோ, அதுபோன்ற எண்ணத்தில்தான் தற்போது தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.