தமிழ்நாடு

“எங்களை இந்த இந்தியச் சமூகம் வெறுக்கிறது” - ஒருபால் தோழனின் கடைசி கடிதம்

“எங்களை இந்த இந்தியச் சமூகம் வெறுக்கிறது” - ஒருபால் தோழனின் கடைசி கடிதம்

Rasus

சமூகம் கொடுத்த அழுத்தத்தால், கேலி கிண்டல்களை தாங்க முடியாததால் ஒருபால் ஈர்ப்பு கொண்ட இளைஞர் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாற்று கருத்துக்களை தெரிவித்தாலே ஒரு மாதிரியாக பார்க்கின்ற இந்தச் சமூகம், சற்று வித்தியாசமாக இருப்பவர்களை வார்த்தைகளால் அவமானப்படுத்தி, மனதை காயப்படுத்திவிடுகிறது. அப்படித்தான், சமுதாயம் கொடுத்த நெருக்கடி காரணமாக சென்னையில் வசித்து வந்த ஒருபால் ஈர்ப்பு கொண்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த அவின்ஷூ பட்டேல் என்ற இளைஞர் ஜூலை 3-ஆம் தேதி நீலாங்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்படுகிறார். தற்கொலைக்கு முன் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு, இந்தச் சமூகத்தால் அவர் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது.

ஃபேஸ்புக் பதிவில் அவர் வெளிப்படையாகவே தான் ஒருபால் ஈர்ப்பு கொண்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “எல்லோருக்கும் தெரியும் நான் ஒரு பையன் என்று. ஆனால் என் நடை, எண்ணங்கள், சிந்தனை, உணர்வு எல்லாவற்றிலும் ஒரு பெண்தன்மை தான் இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களை இந்த இந்தியச் சமூகம் வெறுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவின்ஷூவை நண்பர்கள் பலரும் அவி என்றுதான் அழைத்திருக்கின்றனர். அவியின் தற்கொலை குறித்து மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவர் பேசும்போது, “எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை இருந்ததால், கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்தோம். ஆனால் திடீரென்று ஜூலை 2-ஆம் தேதி அவி செல்போனில் அழைத்தான். தற்கொலை செய்யப்போவதாகவும் கூறினான். அவனை அந்தச் சிந்தனையிலிருந்து வெளிக்கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என் பேச்சை அவன் கேட்கும் நிலையில் இல்லை. 

இதனையடுத்து சென்னையிலுள்ள நண்பர்களை அழைத்து அவனை பத்திரமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினேன். ஆனால் சென்னையிலுள்ள நண்பர்கள் அழைத்தபோது அவியின் செல்போன் அணைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் காலையில் அவன் வேலை செய்த இடத்தின் மேனேஜர் அவனுக்கு தொடர்பு கொண்டபோது, போனை எடுத்தவர் ஒரு போலீசார். அவர்தான் அவி இறந்த தகவலை தெரிவித்திருக்கிறார்” என விஷயத்தை விளக்கி இருக்கிறார். உடனே அவியின் உடலை, மும்பையிலுள்ள அவரது பெற்றோர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.

அவியின் மரணம் இந்தச் சமூகத்திற்கு வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. உங்களைபோல மற்றவர்கள் இருக்கமாட்டார்கள். உங்களை விட எளியவர்களை நீங்கள் எள்ளி நகையாட வேண்டாம் என்பதைதான்.!

தற்கொலை தொடர்பான எண்ணங்கள் இருந்தால் அதனை உடனே கைவிடவும்... உங்களுக்கு தேவையான உதவிகளை பெற, சினேகா தற்கொலை தடுப்பு மைய உதவியை நாடலாம். உதவி எண்கள்.. 044-24640050

Website: www.snehasuicideupdate2019.com/about-sneha.html

Courtesy: TheNewsMinute