தமிழ்நாடு

மதுரை: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் மீட்பு

மதுரை: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் மீட்பு

Sinekadhara

மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராம்பிரசாத். இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தாலுக்கா செம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஆவார். இவர் கல்லூரி அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது நண்பருடன் வசித்து வந்தார். மேலும் இவர் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 3 தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் தனது அறையிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த பயிற்சி மருத்துவரும், நண்பருமான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் நேற்று இரவு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மற்ற நண்பர்கள் ராம்பிரசாத்தை செல்போனில் அழைத்தபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் ராம் பிரசாத்தின் அறைக்கே சென்று கதவை தட்டிப் பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ராம்பிரசாத் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த ராம்பிரசாத்தின் உடலைப் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராம்பிரசாத்தின் பெற்றோருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.