மூதாட்டி ராஜம்மாள் புதியதலைமுறை
தமிழ்நாடு

தென்காசி: ஆதரவு யாருமில்லை.. ஒற்றை உறவான பேத்தியுடன் தவிக்கும் மூதாட்டி.. கண்ணீரை வரவழைக்கும் பேட்டி

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்களும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. ஒற்றை பேத்தியை வைத்துக்கொண்டு காலம் தள்ளும் மூதாட்டி ஒருவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் கிருஷ்ணசாமி வீதியில் வசித்து வருபவர் ராஜம்மாள். கடந்த 17ம் தேதி பெய்த கனமழையில் சிக்கி இவரது வீடு இடிந்தது. ராஜம்மாளுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் பிறந்த நிலையில், மூத்தமகன் செல்வன் இறந்துவிட்டார். சுமை தூக்கும் வேலை செய்து இளையமகன் முத்துமணி 55 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

2 மகள்களில் ஒருவர் வெளியூரில் இருக்கும் நிலையில், அவர் ராஜம்மாளை கண்டுகொள்ளவில்லை. மற்றொரு மகளுக்கு திருமணம் முடித்த பிறகு அவர் கர்ப்பமாக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய கணவன் மீண்டும் வீடுதிரும்பவில்லை.

பிறந்த மகளுக்கு தர்ஷினி என்று பெயர் சூட்டி ஆசையாக வளர்த்துவந்த பொம்மியும், உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், 85 வயதாகும் ராஜம்மாள், தனது பேத்தியை வளர்த்து வருகிறார். தீப்பெட்டி அட்டை ஒட்டும் கூலியையும், மகன் முத்துமணி தரும் சொற்ப தொகையையும் வைத்து தினசரி வாழ்க்கையை நகர்த்தி வந்த ராஜம்மாளின் வாழ்க்கையில் இடியாக வந்து இறங்கியுள்ளது கனமழை.

மழையால் வீடு இடிந்த நிலையில், அருகில் இருக்கும் வீடுகளில் இரவு நேரத்தில் தங்கிக்கொள்ளும் ராஜம்மாளும், பேத்தியும் பகல் நேரத்தில் இடிந்த வீட்டிற்கு வந்து உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். கூலி வேலை செய்யும் மகன் முத்துமணி கோவில் அல்லது கடையில் சென்று தூங்கிவிட்டாலும், பாட்டியும் பேத்தியும் வீடுவீடாக சென்று தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்தையே சந்தித்து வரும் ராஜம்மாள், பேத்தியை வளர்த்து ஆளாக்க, அரசு ஒரு வீட்டைக்கட்டித்தர வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.