தமிழ்நாடு

வீடின்றி தவித்த தம்பதியர் - நண்பர்கள் உதவியோடு வீடு கட்டிக்கொடுத்த நகராட்சி துணைத் தலைவர்!

webteam

கூடலூரில் வீடு இல்லாமல் தவித்துவந்த ஏழை தம்பதிக்கு நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உதவியால் சொந்த வீடு கிடைத்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தட்டக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமையா - அமிர்தம் தம்பதியர். ராமலிங்கம் தனது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், தம்பதியர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட சிவராஜ் என்பவர் வெற்றிபெற்று, கூடலூர் நகராட்சியில் துணைத் தலைவராகவும் பதவி ஏற்றார்.

இந்நிலையில், வாடகை வீட்டில் இருந்த ராமையா - அமிர்தம் தம்பதியரை காலி செய்யச் சொல்லி உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து தம்பதியர் இருவரும் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜை நேரில் சந்தித்து வசிப்பதற்கு ஏற்பாடு செய்துதர வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது மாற்றிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துதருவதாக துணைத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

தம்பதிகள் இருவருக்கும் புதிய வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்கிய சிவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டக்கொல்லி பகுதியில் நிலத்தை வாங்கி, சுமார் 4 லட்சம் செலவில் புதிய வீட்டை கட்டிக் கொடுத்துள்ளனர். கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் சாவி தம்பதியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு, சொந்த வீடு கிடைத்துள்ளது. இதனால் தம்பதியர் இருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல இளங்கோ நகர் பகுதியில் வீடுகள் இல்லாத இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதாகவும், அதனை விரைவில் முடித்து ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.