கொரோனா கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுமுறை தினத்தை முன்னிட்டு சீர்காழி அருகே உள்ள பூம்புகார் சுற்றுலா தளத்தில அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில், தமிழர்களின் பாரம்பரிய நினைவுச்சின்னமாக பூம்புகார் சுற்றுலா தலம் அமைந்துள்ளது. கண்ணகி கோவலன் வாழ்க்கை வரலாறு குறித்த சிற்பங்கள், தமிழர்களின் பண்டைய கலாச்சாரம் குறித்த தொல்லியல் அருங்காட்சியகம், நிலா முற்றம், ஒற்றைக் கல்தூண், பாவை மன்றம், பளிங்கு மண்டபம், சிறுவர் பூங்கா, என பல்வேறு சிறப்புகளை கொண்ட நீண்ட கடற்கரையுடன் கூடிய சுற்றுலா தளமாக பூம்புகார் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் போதிய சுற்றுலா பயணிகள் வருகை இன்றி காட்சியளித்த பூம்புகாரில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் வந்து செல்லும் வெளிமாநில பக்தர்கள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகளும் பூம்புகார் வந்து செல்வதால் சுற்றுலா தளம் களைகட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.