தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை, மதுரை, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மழைக்காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி
- மதுரை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- நீலகிரியில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை பொறுத்தவரை நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதேபோல வேடசந்தூர், வடமதுரை போன்ற இடங்களில் சாரல் மழையும் பெய்ததால் திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.