தமிழ்நாடு

ரயில் பெட்டியில் ஓட்டை... விபரீதத்தை தடுக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை!

ரயில் பெட்டியில் ஓட்டை... விபரீதத்தை தடுக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை!

kaleelrahman

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் வண்டி எண் (06796) சோழன் விரைவு ரயிலில் குழந்தை தவறி விழும் அளவுக்கு பெரிய ஓட்டை இருக்கிறது. பெரியளவில் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு விபத்தை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அரசுப் பேருந்துகள் பலவும் ஓட்டை உடைசல்களுடன் இயக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், அதற்கு போட்டி என்று சொல்லும் அளவுக்கு ரயில் பெட்டிகளின் நிலை மோசமாக இருப்பது வேதனையளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். நீண்ட தூர ரயில்களின் நிலையே இப்படியிருந்தால் எப்படி? என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

சோழன் விரைவு ரயிலில் S-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு பெரிய ஓட்டை இருக்கிறது.
பல ரயில்களில் மின்விசிறிகள் சரிவர இயங்காதது, மூட்டைப்பூச்சி, எலித்தொல்லை, சரியாக பராமரிக்காததால் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் இதுபோன்ற துருப்பிடித்திருக்கும் பெட்டிகளால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்று பல இடங்களில் பெட்டிகள் துரு பிடித்தும் ஆங்கங்கே ஓட்டை உடைசல் ஆகவும் இருக்கும் பெட்டிகளை மாற்றவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.