தமிழ்நாடு

“எச்.ஐ.வி தொற்று ரத்தப் பரிசோதனையில் தெரியாமல் போகலாம்” - மருத்துவரின் விரிவான அலசல்

“எச்.ஐ.வி தொற்று ரத்தப் பரிசோதனையில் தெரியாமல் போகலாம்” - மருத்துவரின் விரிவான அலசல்

webteam

தமிழகத்தில் 24 வயதுள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

முதலில் இந்த விபத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான அந்தப் பெண்ணுக்கு அனுதாபங்களை பதிவு செய்கிறேன். அந்தப் பெண்ணிற்கு அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டியும் கேட்டுக் கொண்டு இந்த விளக்கப் பதிவை எழுதுகிறேன்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை நோயை சரிசெய்யும் பொருட்டு ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படுவது இந்திய பெண்களை பொறுத்தவரை வாடிக்கையான ஒன்றுதான்.

முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கர்ப்பிணிகள் அனைவருக்கும் இந்த ரத்த சோகையை தடுக்கும் பொருட்டு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் அடுத்த மூன்று மாதங்களில் ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அயன் சுக்ரோஸ் (Iron sucrose) எனும் திரவம் நரம்பு வழியாக ஏற்றப்பட்டு இரும்புச்சத்து அதிகரிக்கப்படும்.

இதில் கடைசி மூன்று மாதங்களில் இருக்கும் கர்ப்பிணகளுக்கு ரத்த சோகை மிக அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. கடைசி மூன்று மாதமான 3rd trimester இல் இரும்புச்சத்து மாத்திரைகளோ திரவம் மூலம் ஏற்றப்படும் அயன் சுக்ரோஸோ பயன்தராது. ஆகவே அத்தகைய இரும்புச்சத்து குறைந்த ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுவது அவர்களுக்கு தரப்படவேண்டிய சிகிச்சை. எனவே இது அத்தியாவசிய சிகிச்சை என்ற அளவில் அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் ரத்தம் - டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட அந்த ரத்தமானது அதற்கு நான்கு தினங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி தன்னார்வல தொண்டு நிறுவனம் நடத்திய ரத்ததான முகாம் மூலம் ஒருவர் வழங்கியது.

பொதுவாக எவற்றுக்கெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்?

1. சாலை விபத்துகளில் அடிபட்டு அதிக ரத்தப்போக்குக்கு உள்ளானவர்களுக்கு

2. ரத்தப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்பட வேண்டும்

3. தீவிர ரத்த சோகை (severe anemia)

4. பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பின் அந்த அறுவை சிகிச்சை மூலம் வீணான ரத்தத்தை ஈடு செய்ய ஏற்றப்படும்
(Perioperative blood loss)

இவ்வாறு பல்வேறு காரணங்களுக்கு தேவைப்படும் ரத்தமானது, தொண்டு நிறுவனங்கள், ரத்த வங்கிகள் இவற்றில் தன்னார்வத்துடன் ரத்தத்தை தர விரும்பும் கொடையாளர்களிடம் (Donors) இருந்து பெறப்படுகிறது.

ஒருவர் குருதிக் கொடை தர பல விசயங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தந்தாக வேண்டும்

குருதி தருபவருக்கு வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும், நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமானவராக இருத்தல் வேண்டும், அவருக்கு வேறெதுவும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் இருத்தல் கூடாது. தரப்படும் ரத்தம் ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளதாக இருக்க வேண்டும். 

இவ்வாறு ஒருவர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் தரலாம். நாள்தோறும் தேவைப்படுவோருக்கு தேவையான ரத்த யூனிட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சாலை விபத்துகள் அதிகமாகின்றன..அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத் தேவை அதிகமாக இருக்கிறது.

எனவே ரத்ததான முகாம்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற ஒரு ரத்ததான முகாமில்தான் 21 வயதுடைய ஒரு நபர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடையாக தந்துள்ளார். இப்படி கொடையாக வாங்கப்படும் உதிரமானது மற்றவருக்கு ஏற்றப்படுவதற்கு முன்பு கட்டாயப் பரிசோதனைகளுக்கு பின்பு ஏற்றப்படுகிறது.

என்னென்ன பரிசோதனைகள் செய்யப் படுகின்றன?

முக்கியமான பரிசோதனை:

"Cross Matching" எனப்படும் பரிசோதனை. அதாவது கொடை வாங்கப்பட்ட இந்த ரத்தம், எந்த ரத்த வகையை சேர்ந்தது? 
மற்றும் ரத்தம் ஏற்றப்படப்போகும் குருதி பெறுபவரின் ரத்த வகை எது? இது இரண்டும் ஒத்துப்போகிறதா என்ற சோதனை. இந்தச் சோதனை அனைத்து ரத்த யூனிட்களுக்கும் செய்யப்படுகின்றன.

அதற்கடுத்ததாக, முக்கியமான பரிசோதனைகள்:

எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி சோதனை

இந்த இரண்டு தொற்று நோய்களும் ரத்தத்தால் பரவும் தன்மை கொண்டது. ஆகவே, கொடையாக வாங்கப்பட்ட குருதியில் எச்.ஐ.வி நோய் தொற்றும், ஹெபாடைடிஸ் - பி நோய் தொற்றும் இருக்கிறதா? என்று கட்டாயம் கண்டறியப்படும்.
இந்தப் பரிசோதனை பாசிடிவாக அதாவது கிருமி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் மருத்துவக்கழிவுகளில் சேர்க்கப்படும். அதை கொடுத்த கொடையாளருக்கு நோய் தொற்று இருப்பது அறிவிக்கப்படும். இது அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், மேலும் அவர் ரத்தம் கொடை கொடுப்பதையும் தடுக்கும்.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்விலும், கொடையாக வாங்கப்பட்ட ரத்தத்தில் மேற்சொன்ன Cross matching, HIV பரிசோதனை,Hepatitis - B பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட துறை சார்ந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மூன்று பரிசோதனைகளும் சரியாக இருந்ததால்தான் ரத்தம் அந்தக் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு முடிவு. 

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு.. அவரது ரத்த பரிசோதனையில் எச்.ஐ.வி இல்லை என்று வரும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது.

எப்படி? 
அதற்கு அந்தப் பரிசோதனைகள் பற்றியும் எச்.ஐ.வி கிருமி உடலுக்குள் எப்படி பெருக்கம் செய்கிறது என்றும் பார்க்க வேண்டும்.

ஒருவருக்கு இன்றுதான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் நெகடிவ் என்றுதான் வரும். காரணம்; நாம் பொதுவாக செய்யும் எச்.ஐ.வி பரிசோதனை என்பது "Fourth generation / 3rd generation ELISA antigen- antibody test "

இதில் antigen என்பது உடலுக்குள் வரும் எச்.ஐ.வி கிருமியில் இருக்கும். அந்த antigen க்கு எதிராக உடல் செய்யும் எதிர்வினைதான் antibodies எனப்படும். நாம் செய்யும் இந்த ELIZA (enzyme linked immuno sorbent assay ) என்பது நமது உடலில் உருவான antibody களை அளந்து அது மூலம் எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியும்.

எச்.ஐ.வி உடலுக்குள் நுழைந்த முதல் மற்றும் இரண்டாம் வாரம் - உள்ளே வந்த வைரஸின் அளவு பொறுத்து அதற்குரிய Polymerase chain reaction எனும் சோதனை மூலம் சில வைரஸ்களை பல வைரஸ்களாக பெருக்கம் செய்து கண்டறியலாம். ஆனால் இது மிகவும் காஸ்ட்லியான பரிசோதனை. இதை அனைவருக்கும் செய்வது நமது நாட்டின் நிதி சூழ்நிலைக்கு தற்போதைக்கு சாத்தியமற்றது.

ஆனால் இந்தக் கிருமிக்கு எதிராக உடல் உற்பத்தி செய்த antibody களை நான்காவது வாரத்தில்( 28 நாட்களுக்கு பிறகுதான்) இருந்துதான் கண்டறிய முடியும் (பெரும்பாலும் அனைத்து ரத்த வங்கிகளிலும் இந்த 4th generation ELIZA kits வழங்கப்பட்டுள்ளது).

ஆகவே ஒருவருக்கு இன்று எச்.ஐ.வி தொற்று புதிதாக ஏற்பட்டு இருந்தாலும் , அவருக்கு இன்று பரிசோதனை செய்தால் எச்.ஐ.வி இல்லை என்றுதான் வரும். அவரது ரத்தத்தை நான்கு வாரங்கள் அல்லது 28 நாட்களுக்கு பிறகு சோதனை செய்தால் தான் "பாசிடிவ்" என்று காட்டும். இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு சோதனை செய்து அப்போது வரும் பரிசோதனை முடிவே இறுதியானது. இதைத்தான் மருத்துவம் "window period " என்கிறது.

window period என்பது யாதெனில் ஒருவருக்கு நோய் கிருமித் தொற்று ஏற்பட்ட அன்றிலிருந்து அவருக்கு அந்த நோயின் பரிசோதனை முடிவு " பாசிடிவ்" என்று வரும் நாளுக்கு இடைப்பட்ட இந்தக் காலத்தை window period என்கிறோம். இது நோய்க்கு நோய் மாறுபடுகிறது.

எச்.ஐ.வி பொறுத்தவரை இப்போதைய நமது 4th generation ELIZA kits க்குரிய window period - 28 நாட்கள்

இனி நாம் எடுக்கும் அனைத்து ரத்த யூனிட்களுக்கும் PCR எனும் polymerase chain reaction செய்தாலும் அதற்குரிய window period 7 முதல் 14 நாட்களாகும்.

Polymerase chain reaction என்பது காஸ்ட்லியான பரிசோதனை. இப்போது நாம் செய்யும் rapid card test முறையில் செய்ய இயலாது. தலைசிறந்த ஆய்வகத்தில் மட்டுமே செய்ய இயலும். மேலும் அந்தப் பரிசோதனை நேரம் பிடிக்கும் time consuming test. ஆகவே எமர்ஜென்சி நிலையில் அது பயன் தராது.

ஆகவே இந்தச் சம்பவத்தில் ரத்தம் கொடுத்த கொடையாளர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடுத்திருக்கிறார். அவருக்கு எச்.ஐ.வி தொற்று நவம்பர் 15 முதல் 30 க்குள் ஏற்பட்டிருந்தால், அவரது ரத்த பரிசோதனை முடிவில் "Negative" என்றுதான் வரும். காரணம் அது அந்தக் கிருமிக்கான Window period.

ஆகவே, அந்த ஆய்வக நிபுணர்கள் செய்த எச்.ஐ.வி பரிசோதனை முடிவுகள் நெகடிவாக வந்தது என்பது அவர் window period இல் இருந்ததன் விளைவாகவும் இருக்கலாம்.

மேலும் அவர் வெளிநாடு செல்வதற்காக Medical tests செய்வதற்கு கடந்த வாரம் ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு HIV - positive என்று வந்துள்ளது. இதற்கு காரணம் அவர் window period ஐ தாண்டி விட்டதும் இருக்கலாம்.

அந்த நல்ல மனதுடைய கொடையாளர் தனக்கு எச்.ஐ.வி இருப்பது அறிந்ததும் உடனே தான் ரத்தம் கொடையாக கொடுத்த வங்கிக்கு வந்து அதை கூறுகிறார். ஆனால் அதற்குள் அந்தக் குருதி அது தேவைப்பட்ட கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டு விட்டது. இது ஒரு சோக நிகழ்வு. பெரும் விபத்து.

இதில் அந்த ஆய்வக நுட்புணர்கள் தாங்கள் அந்தக் கொடையாளரின் ரத்தத்தை எச்.ஐ.வி பயிசோதனைக்கு உட்படுத்தியாக முதல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்தப் பரிசோதனையை சரியாக செய்யாமல் ரத்தத்தை ஏற்றியிருந்தால் அது Gross / serious Professional Negligence என்ற வரையறைக்குள் வரும். அது அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தரும். ஆனால் அதுவே அவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்திருந்து window period விளைவாக நெகடிவ் என்று வந்திருந்தால் அது Medical test error (Error Of God ) என்ற ரீதியில் அணுகப்பட வேண்டும். காரணம் இது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய பரிசோதனை முடிவில் உள்ள குறைபாடு.

தற்போதைக்கு அந்த ஆய்வக நிபுணர்கள் மூவரையும் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மருத்துவ குழுவின் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் நமக்கு தெரிய வரும்.

சரி.. இப்போது ஒரு கும்பல் கிளம்பும்; ரத்தம் ஏற்றுவதால் எச்.ஐ.வி பரவுகிறது. ஆகவே ரத்தம் ஏற்றுவது தவறு.. யாரும் ரத்தம் ஏற்றாதீர்கள்.. கொடுக்காதீர்கள்.. என்று கிளம்பும்

இந்தியாவில் தமிழகம் எச்.ஐ வி நோய் தொற்றுள்ளோர் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறது. இதில் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானோர் வாழும் மாநிலங்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த வருடம் 1,134 பேர் ரத்தம் ஏற்றியதால்தான் தனக்கு எச்.ஐ வி வந்தது என்று கூறியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குஜராத். ஒட்டுமொத்த இந்தியாவில் கடந்த வருடம் 20,592 பேருக்கு ரத்தம் மூலம் எச்.ஐ.வி வந்ததாக கூறியுள்ளனர். (இது நோயாளியின் வாய்மொழி வழி பெறும் தகவல் ஆதலால் தகாத பாதுகாப்பற்ற உறவு மூலம் வந்த நோயை மறைக்க கூட தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டது மூலம்தான் நோய் வந்தது என்று நோயாளியே கூறவும் வாய்ப்புண்டு)

இந்தியாவில் அனுதினமும் குருதிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 1200 சாலை விபத்துகள் நமது நாட்டில் நடக்கின்றன. வருடத்திற்கு சராசரியாக 6 கோடி அறுவை சிகிச்சைகள் - சாலை விபத்துகளில் பாதிப்படைந்தோருக்கு செய்யப்படுகிறது. 23 கோடி மேஜர் அறுவை சிகிச்சைகள் நமது நாட்டில் வருடா வருடம் நடக்கிறது. 33 கோடி கேன்சர் நோயாளிகளுக்கு ரத்தம் அனுதினமும் தேவை. ஆகவே நமது குருதித் தேவை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இன்னுமொரு விஷயத்தையும் பதிவு செய்கிறேன். வருடம் தோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் யூனிட் ரத்தம் தேவையற்றதாக அல்லது ஏற்றத்தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டு மருத்துவ கழிவுக்குச் செல்கிறது. எச்.ஐ.வி, மலேரியா, சிஃபிலிஸ், ஹெபாடைடிஸ் பி போன்ற தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்படுவதும் இந்த நிராகரிப்புக்கு முக்கியமான காரணம்

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 1% மக்கள் ரத்தக்கொடையாளர்களாக இருக்க வேண்டும் என்பது. அப்படிப் பார்த்தால்; நமது நாட்டில் 1.3 கோடி பேர் ரத்த கொடையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் ரத்தம் தருவது 95 லட்சம் மக்கள் மட்டுமே. ஆனால் இந்தியாவில் 51 கோடி பேர் ரத்தம் தர தகுதியானவர்கள் என்று NACO எடுத்த ஆய்வு கூறுகிறது.

டெல்லி போன்ற நகரங்களில் தேவைக்கு மேல் ரத்தம் இருக்கிறது.  பிஹார் போன்ற ஊர்களில் 85 சதவிகிதம் பின்னடைவில் இருக்கிறது. ரத்தம் என்பது ஒருவரின் உயிர் காக்கும் உன்னத விசயம். இந்த ஒரு விபத்தை மனதில் கொண்டு நாம் ரத்த கொடையாளர்களையோ ரத்தம் ஏற்றி சிகிச்சை அளிக்கும் முறையையோ எள்ளி நகையாடுவது தவறு.

ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தல் (Blood transfusion) என்பது நவீன மருத்துவம் கண்டறிந்த மிக முக்கிய உயிர் காக்கும் சிகிச்சை. அதன் மூலம் உயிர் பிழைத்த பல கோடி உயிர்கள் சொல்லும் அதன் முக்கியத்துவத்தை. ஆண்டு தோறும் பல கோடி யூனிட்டுகள் ரத்தம் ஏற்றப்பட்டு பல கோடி உயிர்கள் காக்கப்படும் நம் நாட்டில், ரத்தம் மூலம் எச்.ஐ.வி பரவியது என்று நோயாளியே ஒப்புக்கொண்டபடி வருடம் 20 ஆயிரம் பேர் என்ற அளவில்தான் வருகிறது. மக்கள் தொகையை கொண்டு கணக்கிட்டால் இந்தத் தொகை மிகச்சொற்பம் என்பதை உணர முடியும்.

சரி..ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி நோய் தொற்றை தடுப்பது எப்படி?

1. அவரவர் குடும்ப தேவைக்கு அவரவர் குடும்பத்தில் ஒருவரே ரத்த தானம் அளிக்கலாம். 
இதை Autologous blood transfusion என்போம்.

2. குருதியை பணத்திற்காக விற்பது 1995 முதல் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் Red market எனும் பெயரில் இன்னும் ரத்தத்திற்கான கள்ளச்சந்தை புழக்கத்தில் இருக்கிறது. இந்தச் சட்டத்தை இன்னும் கடுமையாக்கிட வேண்டும். இதன் மூலம் கிருமித்தொற்றுக்கு உள்ளான ரத்தம் பொதுவெளியில் கலப்பதை தடுக்க இயலும்.

3. கொடையாளர்களின் ரத்தத்தை எச்.ஐ.வி போன்ற பரிசோதனை செய்வதில் இன்னும் நவீன முறைகளை புகுத்தலாம். window period error இதனால் குறையும் வாய்ப்புண்டு. இருப்பினும் முழுவதும் நீக்க இயலாது.

4. தன்னார்வல ரத்த கொடையாளர்களை அதிகமதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் தேவையான ரத்தம், ஆரோக்கியமான மக்களிடம் இருந்து கிடைக்கும்.

கடைசியாக

நமது தமிழகத்தில் வருடா வருடம் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது

2015-16 இல் 13,315 
2016-17 இல் 11,809 
2017-18 இல் 8,718

தமிழக அரசு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோக்கங்கள் யாவும் மக்களுக்கு ஆரோக்கியமான நல்வாழ்வை வழங்கிடவே. இது போன்ற விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன. ஆனால் மருத்துவ துறையில் மட்டுமே மிகவும் பெரிதுபடுத்தப்படுகின்றன. ஆக, ஒரு விசயத்தின் உண்மையை நடுநிலையோடு அதன் அடிவரை ஆராய்ந்து முடிவு எடுப்பதே சான்றோர்க்கு அழகு.

முடிவுரை

ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப்பெண் அனுதாபங்களுக்கு உரியவர். அவருக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட வேண்டும். தற்போது எச்.ஐ.விக்கு உள்ள சிகிச்சை முறைகள் யாவும் தலைசிறந்தவை. அவருக்கு உயர்தர சிகிச்சையை அரசு உறுதி செய்ய வேண்டும். குருதி மூலம் எச்.ஐ.வி., ஹெபாடைடிஸ் பி போன்ற நோய் தொற்றுகள் பரவும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் அரசு முடிவுகளை எடுத்து செயலாற்ற வேண்டும். 

Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,M.D.,
பொது நல மருத்துவர், சிவகங்கை.