முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ், ஜெயலலிதா pt web
தமிழ்நாடு

அக்.30 | முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவசம் கடந்து வந்த பாதை.. யாருக்கு உரிமை? யாருக்கு வெற்றி?

பசும்பொன் தேவரின் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து பெறும் உரிமை, இந்தமுறை போட்டி, வழக்கின்றி சுமூகமாக முடிந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் மணிகண்டபிரபு

அக்டோபர் 30

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து பெறும் உரிமை, இந்தமுறை போட்டி, வழக்கின்றி சுமூகமாக முடிந்துள்ளது. தங்கக் கவசம் அதிமுக உரிமைப் பொருளாகிவிட்டதால், இதற்காக போராடி வந்த ஓ.பி.எஸ் பின்வாங்கி விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சூழலில் தேவரின் தங்கக்கவசம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்கலாம்...

அக்டோபர் 30... தமிழ்நாட்டின் முக்கியமான நாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிறந்த நாளிலேயே உயிர் நீத்த முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அந்நாளில் அவரது பிறப்பிடமான பசும்பொன்னில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 28- ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் குருபூஜை விழாவில் முதலமைச்சர் முதற்கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2010-ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ளச் சென்ற ஜெயலலிதாவிடம், தேவருக்கு தங்கக்கவசம் சாத்த வேண்டும் என கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தார்.

ரூ.3.5 கோடி மதிப்பில் தங்கக் கவசம்

2014-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, பசும்பொன்னுக்கு நேரில் சென்று 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் வழங்கினார். அதன் பின்னர் ஆண்டுதோறும் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாக்களில் தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் அணிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த தங்க கவசம் ஆண்டுதோறும் தேவர் குரு பூஜையின் போது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து எடுத்து தேவருக்கு சாத்தப்பட்டு பிறகு வங்கி பெட்டகத்திலேயே பாதுகாப்பாக வைக்கப்படும்.

ஆண்டுதோறும் அதிமுக பொருளாளரும், தேவர் நினைவிட நிர்வாகியும் சேர்ந்து இந்த கவசத்தை எடுப்பது வழக்கமாக உள்ளது. இதற்காக அதிமுக பொருளாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடைபெற்ற குருபூஜையின் போது ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

முதல்முறை ஏற்பட்ட பிரச்னை

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக முதல்முறையாக பிரச்னை ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், டிடிவி தினகரன் தரப்பில் ரங்கசாமி என்பவரும் பொருளாளராக இருந்த போது, இவர்களில் யாரை அதிமுக பொருளாளராக ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு தங்க கவசத்தை வெளியில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வங்கிக்கு நேரடியாக வந்து உரிமை கொண்டாடிய நிலையில் வங்கி அதிகாரிகள் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்விடம் கவசத்தை ஒப்படைத்தனர்.

பின்னர் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வரானார். அதன் பிறகு 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓ. பன்னீர்செல்வம் நேரில் வந்து தங்க கவசத்தை பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அதிமுகவில் நிலவிய ஒற்றைத்தலைமை பிரச்சனையால் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணியாக மாறினர். 2022 ஆம் ஆண்டு இந்த பிரச்னை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்கப்பட்டது.

யார் வேண்டுமானாலும் தங்கக்கவசத்தை வைக்கலாம்

இப்படி பல பிரச்னைகளை கடந்தநிலையில் தங்கக்கவசம் தொடர்பாக ஈ.பி.எஸ் தரப்பில் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன், அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தங்க கவசத்தை எடுக்கலாம் என உத்தரவிட்டார். ஆனால் இம்முறை பிற தரப்பிலிருந்து எதிர்ப்புக்குரல் எதுவும் பெரிதாக எழவில்லை.

ஓபிஎஸ் ஆதரவாளர் ராமமூர்த்தி கூறுகையில், அதிமுகவை தொண்டர்களுக்காக மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருக்கிறோமே ஒழிய, தங்கக் கவசத்தை யார் வைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. தேசியத் தலைவருக்கு யார் வேண்டுமானாலும் தங்கக் கவசத்தை வைக்கலாம். அண்ணன் கூட (ஓபிஎஸ்) கடந்த வருடத்தில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றுதான் சொன்னார். அதையும் மீறி அண்ணன் ஆதரவாளர் ஒருவர் வழக்கு தொடுத்துவிட்டார்” என தெரிவித்தார்.

முழுமையான வெற்றி

தங்கள் தரப்புக்கு எப்போதும் வெற்றியாகவே உள்ளதாக தெரிவிக்கிறார் அதிமுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் கூறுகையில், “இது முழுமையான வெற்றிதான். இப்போதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு கூட முழுமையான வெற்றிதான்” என தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தேவர் தங்கக்கவசத்தை யார் பெறுவது என்பது தொடர்பாக ஈ.பி.எஸ், ஓபி.எஸ், டிடிவி தினகரன் என மும்முனை போட்டி நடந்து வந்த நிலையில் இம்முறை போட்டிக்களம் எதுவுமின்றி பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளதாக பார்க்கின்றனர் அரசியல் நோக்கர்கள்...