52 வது ஆண்டில் அதிமுக PT
தமிழ்நாடு

1973ல் தொடங்கி 52 வது ஆண்டில் அதிமுக.. வரலாற்றை திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு சிறப்பு தொகுப்பு

PT WEB

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் இன்று

1972ஆம் ஆண்டு அக்டோபர் 17, கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் மதுரையில் தனிக்கட்சியைத் தொடங்கிய நாள். ஆம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்1972ல் மதுரையில் உதித்து 1973ல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் களம் கண்டு பெற்ற வெற்றியின் மூலம் மக்கள் செல்வாக்கை உறுதி செய்தது. அதன் பின் கட்சி தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அதாவது 1977 ல் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தது. கட்சியை நிறுவி வழிநடத்தி வந்த எம்ஜிஆரின் மறைவிற்குப்பின்னர் இரு அணிகளாக பிரிந்த இயக்கம் மீண்டும் 1989 பிப்ரவரியில் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தது. தொடர்ந்து 1991ல் ஆளுங்கட்சியானது. 1996 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பொழுதிலும் மீண்டும் 2001ல் ஆட்சியைப் பிடித்தது. 2006ல் கணிசமான இடங்களை வென்ற போதிலும் எதிர்க்கட்சி வரிசையே கிட்டியது. 2011ல் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அதிமுக 2016ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வெற்றியைப் பெற்று சாதனை புரிந்தது.

ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராகவும்,தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் ஐந்தில் மறைந்தார். அதற்குப் பின் அதிமுக பல்வேறு இக்கட்டுகளை எதிர்கொண்டது. இருப்பினும் 2017ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசு தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தது. அதன் பின் 2021ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அதிமுகவிற்கு மீண்டும் ஒரு சோதனை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டையர்களாக வலம் வந்த ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள், நீதிமன்றம் வரை செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

2022ஆம் ஆண்டு ஜூலை 22ல் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின் இவ்வாண்டு பிப்ரவரியில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியத் தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் இரு முறை பிளவினைக் கண்டு மீண்டும் ஒருங்கிணைந்த இயக்கம், படுதோல்வியில் இருந்து மீண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த இயக்கம், தொடர்ந்து 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டுள்ள அதிமுக தனது 52ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எம்ஜிஆர் எனும் ஆளுமையால் உருவாக்கப்பட்ட இயக்கம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கடந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்களின் அன்பை பெற்றுள்ள இயக்கமாக வளர்ந்து வருகிறது.