அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 1998ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது, தமிழ்நாட்டில் அதிமுக 18 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் வென்றன. தொடக்கத்தில் இருந்தே பிரச்சனை இருந்த நிலையில், தனது முக்கிய கோரிக்கைகளை நிராகரித்ததால், பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை 1999ல் திரும்ப பெற்றார் ஜெயலலிதா.
அதைத்தொடரந்து, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. அடுத்ததாக 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது அதிமுக.
அந்த கூட்டணியின்போது தமிழ்நாடு, புதுவையின் மொத்த 40 தொகுதிகளில் 33ல் அதிமுகவும், 7 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிட்ட நிலையில், 40 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது கூட்டணி. இதனால், கூட்டணியும் முடிவுக்கு வந்தது. அதுமுதல் ஜெயலலிதா மறைவு வரை அதிமுகவும் பாஜகவும் கூட்டணியே அமைக்கவில்லை..
குறிப்பாக 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘மோடியா லேடியா’ என்ற முழக்கத்தை முன்வைத்து தனித்து களம் கண்டது அதிமுக. சூறாவளியாக சுழன்று பரப்புரை செய்தார் ஜெயலலிதா. அப்போது, அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பாமக ஒரு தொகுதியிலும் பாஜக ஒரு தொகுதியிலும் மட்டுமே வென்றது.
அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது அதிமுக. அதிலும் 134 தொகுதிகளை கைப்பற்றி, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது அதிமுக. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், எடப்பாடி தலைமையிலான அதிமுக 2019ல் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
பின்னர், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் இந்த கூட்டணி நீடித்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி முறிந்து அதிமுகவும் - பாஜகவும் தனித்தனியே களம்கண்டன.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜெயலலிதா, அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சால், நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது கூட்டணி. இன்னும் அடுத்தடுத்து என்ன நடக்குமென பொறுத்திருந்து பார்ப்போம்!
- எழுத்து: யுவராம் பரமசிவம்