தமிழ்நாடு

நூற்றாண்டு விழாவால் சேதமடைந்த ஓடுதளம்: 10 நாள் மட்டுமே நடைபெறும் உதகை குதிரை ரேஸ் !

உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றதில் ஓடுதளம் சேதமானது. இதன் காரணமாக நாளை தொடங்கவுள்ள குதிரைப் பந்தயப் போட்டிகள் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தை சீரமைப்பதில் காலத்தாமதமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி, உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயங்கள் நடைபெறும். வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என சுமார் 28 நாட்கள் இந்தப் பந்தயங்கள் நடைபெறும். குதிரைப் பந்தயங்களை எதிர்பார்த்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் ஆவலுடன் காத்திருப்பர்.

ஆனால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, அதற்கான சீரமைப்புப் பணிகளுக்காக மைதானம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. மழையின்மை காரணமாக ஓடுதளத்தை சீரமைப்பது பெரும் ரேஸ் கிளப் நிர்வாகிகளுக்கு பெரும் சவாலாகிவிட்டது. பெரும் போராட்டத்துக்கு இடையே ஓடுதளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குதிரைப் பந்தயம் நடைபெறுவதே கேள்விக்குறியாக இருந்த சூழலில், குதிரைப் பந்தயங்கள் நாளை (மே 12) தொடங்கும் என்றும், மொத்தம் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் எஸ்.எம்.கார்த்திகேயன் கூறியது " உதகை குதிரைப் பந்தயங்களின் முதல் நாள் பந்தயம் நாளை (மே 12) நடைபெறுகிறது. 17-ம் தேதி 2-ம் நாள் பந்தயமும், 18-ம் தேதி 1000 கினியாஸ் நீலகிரி கிரேடு 3-க்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. 22-ம் தேதி நீலகிரி 2000 கினியாஸ் கிரேடு 2-க்கான பந்தயமும், 25-ம் தேதி 5-வது நாள் பந்தயமும், ஜூன் 1-ம் தேதி 6-வது நாள் பந்தயமும் நடைபெற உள்ளன. முக்கியப் போட்டியான நீலகிரி டெர்பி 3-ம் தேதியும், நீலகிரி தங்கக் கோப்பைப் பந்தயம் 10-ம் தேதியும், இறுதி நாள் பந்தயங்கள் 14-ம் தேதியும் நடைபெற உள்ளன. அனைத்து நாட்களிலும் காலை நேரங்களில் பந்தயங்கள் நடைபெறும். இந்த ஆண்டு பந்தயங்களில் பங்கேற்க 503 குதிரைகள் உதகைக்கு வர உள்ளன. 23 பயிற்சியாளர்கள், 50 ஜாக்கிகள் பங்கேற்கின்றனர். மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரைப் பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பு, உதகை ரேஸ்கோர்ஸில் இடம்பெறும் என்றார் அவர்.