அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்புகளூர் வேலக்குறிச்சி ஆதினத்திற்கு சொந்தமான 12.5 ஏக்கர பரப்பிலான நிலங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் வாடகை நிர்ணயக்குழுக்கு உத்தரவிடக்கோரி, ஆதினகர்த்தரான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகபாரியிடம் எந்த உரிமமும் இல்லாததால் அவரை ஆக்கிரமிப்பாளர் என்றே கருத வேண்டுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு இடங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மூன்றாவது நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரம் கோயில்களின் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுதொடப்பான அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை பின்பற்றிவிட்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தனது உத்தரவில் தெரிவித்தார்.