கோவையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஓமலூர் அருகே மீட்கப்பட்டார். இந்தக் கடத்தலில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜான் கோ பிடல் நேற்று கடத்தப்பட்டார். ஜானின் அலுவலகத்துக்குள் நுழைந்த 10 பேர் கத்தி முனையில் அவரை கடத்திச் சென்றனர். அலுவலகத்தில் இருந்த கணினி மற்றும் சில பத்திரங்களையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றனர். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் ஜான் கோ பிடலின் முன்னாள் தொழில் பங்குதாரர் கரிகாலன் அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் ஜான் கடத்தப்பட்ட கார் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூரில் இருப்பதை ஜி.பி.எஸ். மூலம் கண்டறியப்பட்டது. தொப்பூரில் ஏ.டிஎம். ஒன்றின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த காரிலிருந்த ஜான் கோ பிடலை காவல்துறையினர் மீட்டனர். அவருக்கு அருகிலிருந்த நபரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் இருவரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட ஜான் கோ பிடலையும், கைது செய்யப்பட்ட மூவரையும் கைது செய்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கோவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.