தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா வழக்கு: வட்டாட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கச்சத்தீவு திருவிழா வழக்கு: வட்டாட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

webteam

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடர்பான வழக்கில் ராமேஸ்வரம் வட்டாட்சியர், விழா ஒருங்கிணைப்பாளர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியைச் சேர்ந்த பிரின்சோ ரேமண்ட், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் மோட்டார் படகுகளில் சென்று திருவிழாவில் கலந்துக்கொள்வது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக மோட்டார் படகில் செல்ல ஒருவருக்கு ரூ.1300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தாத மீனவர்கள் திருவிழாவிற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 

இதனால் ஏழை மீனவர்கள் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. கச்சத்தீவு அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் செல்ல மீனவர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, கச்சத்தீவு திருவிழா வழிபாட்டிற்கு செல்வதற்கான விதிகள் குறித்து ராமேஸ்வரம் வட்டாட்சியர், விழா ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி ஆகியோர் விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.