தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தை, பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மீனாட்சி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் வெளியாக காரணமாக இருந்த கோவை மாவட்ட காவல் க‌ண்காணிப்பாளர் பாண்டியராஜன், காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, பத்து பெண் வழக்கறிஞர்களும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான மனுக்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரும் மனு குறித்து பதிலளிக்க, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி நகர காவல் ஆய்வாளர் ஆகியோரும் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.