இருசக்கர வாகனங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ரேபிடோ என்ற செயலி மூலம், "பைக் டாக்ஸி" என்ற பெயரில், சென்னையில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டன. மோட்டார் வாகன சட்டப்படி, தனிநபரின் வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடாது என்பதால், ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் PLAY STORE-களில் இருந்து நீக்க, சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை செய்தது. அதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் எந்த விதிமுறையும் இல்லை, என ரோபிடோ நிறுவன வழக்கறிஞர் வாதிட்டார். அதனால், தங்களின் பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
அதுதொடர்பாக தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தனர். இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.